திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
53. தேவராயும் அசுரராயுஞ்
திருச்சிற்றம்பலம்
தேவராயும் அசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர் நாவராயும் நண்ணுபாரும் விண்எரிகால் நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசன்என்னும் மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே. 1
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதிபார் எற்றுநீர் தீக் காலு மேலை விண்இயமா னனோடு மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள் முற்றுமாகி வேறுமானான் மேயதுமு துகுன்றே. 2
வாரிமாகம் வைகுதிங்கள் வாளரவஞ் சூடி நாரிபாகம்2 நயந்துபூமேல் நான்முகன்றன் தலையில் சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர் மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயதுமு துகுன்றே. 3
பாடுவாருக் கருளும்எந்தை பனிமுதுபௌ வமுந்நீர் நீடுபாரும் முழுதுமோடி யண்டர்நிலை கெடலும் நாடுதானும் ஊடுமோடி ஞாலமும்நான் முகனும் ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்ததுமு துகுன்றே. 4
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம்மீ சணவிச் செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர்திசை வணங்கத் தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ முழங்குசெந்தீ யேந்தியாடி மேயதுமு துகுன்றே. 5
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லரா நல் லிதழி சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைத்தைம் புலனும் அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே. 6
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்துபோயிற்று. 7
மயங்கும்மாயம் வல்லராகி வானினொடு நீரும் இயங்குவோருக் கிறைவனாய இராவணன்தோள் நெரித்த புயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள் முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே. 8
ஞாலமுண்ட மாலும்மற்றை நான்முகனும் மறியாக் கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால் ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப்போ தும்ஏத்தும் மூலமுண்ட நீற்றர் வாயான் மேயதுமு துகுன்றே. 9
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல்மிண்டர் சொல்லை நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங்கை தொழுமின் மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் பொங்குவிடத் தையுண்ட முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயதுமு துகுன்றே. 10
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்குமு துகுன்றைப் பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன் .... .... .... .... .... .... .... .... இப்பதிகத்தில் 11-ஆம் செய்யுளில் பின்னிரண்டடிகள் மறைந்துபோயின. சுவாமி : விருத்தகிரீஸ்வரர்; அம்பாள் : விருத்தாம்பிகை.
No comments:
Post a Comment