Wednesday, August 26, 2020

51. வெங்கண் ஆனை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

51. வெங்கண் ஆனை

திருச்சிற்றம்பலம்


வெங்கண் ஆனை யீருரிவை போர்த்துவிளங் குமொழி மங்கைபாகம் வைத்துகந்த மாண்பதுவென் னைகொலாம் கங்கையோடு திங்கள்சூடிக் கடிகமழுங் கொன்றைத் தொங்கலானே தூயநீற்றாய் சோபுரமே யவனே.  1
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவிரிந் திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாம்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த  வெஞ்சிலையாய் சோபுரமே யவனே.     2 
தீயராய வல்லரக்கர் செந்தழலுள் ளழுந்தச்
சாயஎய்து வானவரைத் தாங்கிய தென்னைகொலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித்தோல் உடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே.  3 
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதரவென் னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங்கண் ணியொடும்
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுரமே யவனே.  4 
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணம்என் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் தன்னை யொல்க வுதைத்தருளித்
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.  5 
கொன்னவின்ற மூவிலைவேற் கூர்மழுவாட் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பென் னைகொலாம்
அன்னமன்ன மெல்நடையாள் பாகம்அமர்ந் தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுரமே யவனே.  6 
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடியார் பணிவார்
கற்றகேள்வி ஞானமான காரணம்என் னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன்வெண் டலையில்
துற்றலான கொள்கையானே சோபுரமே யவனே.  7 
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.  8 
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணம்என் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மேல் அயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.  9 
புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே யுரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமையென் னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுரமே யவனே.  10 
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தால்
ஞாலம்மிக்க தண்டமிழால் ஞானசம் பந்தன்சொன்ன
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர்வா னுலகே.

சுவாமி : மங்களபுரீஸ்வரர்; அம்பாள் : தியாகவல்லியம்மை.  11 
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...