திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
46. குண்டைக் குறட்பூதங் குழும
திருச்சிற்றம்பலம்
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. 1
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
சுரும்புண்விரி கொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே. 2
ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே. 3
எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. 4
கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. 5
துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. 6
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வனின் றாடும்வீரட் டானத்தே. 7
கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லால் எயில்எய்தான் ஆடும்வீரட் டானத்தே. 8
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
கடியார் கழுநீலம் மலரும் மதிகையுள்
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. 9
அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடன்ஏந்தி யுடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே. 10
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலரே.
சுவாமி : வீரட்டானேசுவரர்; அம்பாள் : பெரியநாயகி. 11
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment