திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
28. செப்ப
நெஞ்சே
திருச்சிற்றம்பலம்
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1
பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 2
செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயஎம்
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 3
பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 4
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
அறையுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 5
துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 6
சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி யாடிப் பரவு வாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. 7
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. 8
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. 9
கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. 10
அந்தண் சோற்றுத் துறைஎம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின் அடியா ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.
சுவாமி : ஓதனவனேஸ்வரர்; அம்பாள் : அன்னபூரணி. 11
No comments:
Post a Comment