திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
29. ஊரு லாவு
திருச்சிற்றம்பலம்
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல் சீரு லாவு மறையோர் நறையூரில் சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 1
காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி ஓடு கங்கை யொளிர்புன் சடைதாழ வீடு மாக மறையோர் நறையூரில் நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 2
கல்வி யாளா கனகம் அழல்மேனி புல்கு கங்கை புரிபுன் சடையானூர் மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில் செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 3
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ ஆட வல்ல அடிக ளிடமாகும் பாடல் வண்டு பயிலும் நறையூரில் சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 4
உம்ப ராலும் உலகின் னவராலும் தம்பெ ருமைய ளத்தற் கரியானூர் நண்பு லாவு மறையோர் நறையூரில் செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 5
கூரு லாவு படையான் விடையேறி போரு லாவு மழுவான் அனலாடி பேரு லாவு பெருமான் நறையூரில் சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. 6
அன்றி நின்ற அவுணர் புரமெய்த வென்றி வில்லி விமலன் விரும்புமூர் மன்றில் வாசம் மணமார் நறையூரில் சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 7
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால் நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர் பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில் திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 8
ஆழி யானும் அலரின் உறைவானும் ஊழி நாடி உணரார் திரிந்துமேல் சூழு நேட எரியாம் ஒருவன்சீர் நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 9
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார் கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல் உய்ய வேண்டில் இறைவன் நறையூரில் செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. 10
மெய்த்து லாவு மறையோர் நறையூரில் சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன் பத்தும் பாடப் பறையும் பாவமே. சுவாமி : சித்தநாதேஸ்வரர்; அம்பாள் : சௌந்தர நாயகி. 11
No comments:
Post a Comment