திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
34. அடலே றமருங் கொடியண்ணல்
திருச்சிற்றம்பலம்
அடலே றமருங் கொடியண்ணல் மடலார் குழலா ளொடுமன்னுங் கடலார் புடைசூழ் தருகாழி தொடர்வா ரவர்தூ நெறியாரே. 1
திரையார் புனல்சூ டியசெல்வன் வரையார் மகளோ டுமகிழ்ந்தான் கரையார் புனல்சூழ் தருகாழி நிரையார் மலர்தூ வுமினின்றே. 2
இடியார் குரல்ஏ றுடையெந்தை துடியா ரிடையா ளொடுதுன்னுங் கடியார் பொழில்சூழ் தருகாழி அடியார் அறியார் அவலம்மே. 3
ஒளியார் விடமுண் டவொருவன் அளியார் குழல்மங் கையொடன்பாய்க் களியார் பொழில்சூழ் தருகாழி எளிதாம் அதுகண் டவரின்பே. 4
பனியார் மலரார் தருபாதன் முனிதா னுமையோ டுமுயங்கிக் கனியார் பொழில்சூழ் தருகாழி இனிதாம் அதுகண் டவரீடே. 5
கொலையார் தருகூற் றமுதைத்து மலையான் மகளோ டுமகிழ்ந்தான் கலையார் தொழுதேத் தியகாழி தலையால் தொழுவார் தலையாரே. 6
திருவார் சிலையால் எயிலெய்து உருவார் உமையோ டுடனானான் கருவார் பொழில்சூழ் தருகாழி மருவா தவர்வான் மருவாரே. 7
அரக்கன் வலியொல் கஅடர்த்து வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான் சுரக்கும் புனல்சூழ் தருகாழி நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 8
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான் உருவிற் பெரியா ளொடுசேருங் கருநற் பரவை கமழ்காழி மருவப் பிரியும் வினைமாய்ந்தே. 9
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற அமைந்தான் உமையோ டுடன்அன்பாய்க் கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 10
நலமா கியஞான சம்பந்தன் கலமார் கடல்சூழ் தருகாழி நிலையா கநினைந் தவர்பாடல் வலரா னவர்வான் அடைவாரே. சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. 11
No comments:
Post a Comment