Thursday, August 27, 2020

52. மறையுடையாய் தோலுடையாய்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

52. மறையுடையாய் தோலுடையாய்

திருச்சிற்றம்பலம்


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  1
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  2 
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  3 
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  4 
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  5 
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  6 
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  7 
குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  8 
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்
சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  9 
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  10 
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

சுவாமி : நித்யசுந்தரேஸ்வரர்; அம்பாள் : மங்களநாயகி.  11 
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...