Tuesday, August 18, 2020

42. பைம்மா நாகம்

 

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

42. பைம்மா நாகம்

திருச்சிற்றம்பலம்


பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றிவெண் கொம்பொன்று பூண்டு செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணியோர் செல்வர் அம்மா னோக்கிய அந்தளிர் மேனி யரிவையோர் பாகம் அமர்ந்த பெம்மான் நல்கிய தொல்புக ழாளர் பேணு பெருந்துறை யாரே.  1
மூவரு மாகி இருவரு மாகி
  முதல் வனுமாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப்
  பல்கணம் நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
  தண்மதிள் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார்
  தீதில் பெருந்துறை யாரே.  2 
செய்பூங் கொன்றை கூவிள மாலை
  சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகம்
  கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை
  காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
  பில்கு பெருந்துறை யாரே.  3 
நிலனொடு வானும் நீரொடு தீயும்
  வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
  புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி
  நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும்
  மல்கு பெருந்துறை யாரே.  4 
பணிவா யுள்ள நன்கெழு நாவின்
  பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ள மிலாத
  சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர்
  அரிசி லுரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
  மல்கு பெருந்துறை யாரே.  5 
எண்ணார் தங்கள் மும்மதிள் வேவவே
  வலங் காட்டிய எந்தை
விண்ணோர்சாரத் தன்னருள் செய்த
  வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல் அறாத
  பசுபதி யீசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
  பேணு பெருந்துறை யாரே.  6 
விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
  வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
  பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
  தண்ணரிசில் புடைசூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னங்
  கூடு பெருந்துறை யாரே.  7 
பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
  பொருகடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால்வரை யூன்றி
  மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
  மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி
  யணவு பெருந்துறை யாரே.  8 
புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
  பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வாயல்லி மேலுறைவானும்
  உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய்தாளில் தாமரைமொட்டின்
  முகம்மலரக்கயல் பாயக்
கள்வாய்நீலங் கண்மலரேய்க்குங்
  காமர் பெருந்துறை யாரே.  9 
குண்டுந் தேருங் கூறை களைந்துங்
  கூப்பி லர்செப் பிலராகி
மிண்டும் மிண்டர் மிண்ட வைகண்டு
  மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
  தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
  மல்கு பெருந்துறை யாரே.  10 
கடையார் மாடம் நன்கெழு வீதிக்
  கழுமல வூரன் கலந்து
நடையார் இன்சொல் ஞானசம் பந்தன்
  நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்
  பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமும் ஒன்றி
  உலகினில் மன்னுவர் தாமே.

சுவாமி : சிவாநந்தநாதர்; அம்பாள் : மலையரசியம்மை.  11 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...