Sunday, August 16, 2020

40. பொடியுடை மார்பினர்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

40. பொடியுடை மார்பினர்

திருச்சிற்றம்பலம்


பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப் பூத கணம்புடை சூழக் கொடியுடை யூர்திரிந் தையங் கொண்டு பலபல கூறி வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க் கடிகமழ் மாமல ரிட்டுக் கறைமிடற் றானடி காண்போம்.  1
அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
  ஆடர வம்அசைத் தையம்
புரைகெழு வெண்டலை யேந்திப்
  போர்விடை யேறிப் புகழ
வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகமழ் மாமலர் தூவி
  விரிசடை யானடி சேர்வோம்.  2 
பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்
  புன்றலை யங்கையி லேந்தி
ஊண்இடு பிச்சையூ ரையம்
  உண்டியென் றுபல கூறி
வாநெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தாள்நெடு மாமல ரிட்டுத்
  தலைவன தாள்நிழல் சார்வோம்.  3 
தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
  தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சைகொள் செல்வம்
  உண்டியென் றுபல கூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவிக்
  கறைமிடற் றானடி காண்போம்.  4 
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
  காதிலொர் வெண்குழை யோடு
புனமலர் மாலை புனைந்தூர்
  புகுதியென் றேபல கூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தன தூவி
  யெம்பெரு மானடி சேர்வோம்.  5 
அளைவளர் நாகம் அசைத்தன லாடி
  அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யிற்பலி கொள்ளுங்
  கருத்தனே கள்வனே யென்னா
வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர் தூவித்
  தலைவன தாளிணை சார்வோம்.  6 
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
  வழிதலை யங்கையி லேந்தி
உடலிடு பிச்சையோ டையம்
  உண்டியென் றுபல கூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமல ராயின தூவித்
  தலைவன தாள்நிழல் சார்வோம்.  7 
உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
  ஒளிர்கட கக்கை அடர்த்து
அயலிடு பிச்சையோ டையம்
  ஆர்தலை யென்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவி
  தாழ்சடை யானடி சார்வோம்.  8 
கரியவன் நான்முகன் கைதொழு தேத்தக்
  காணலுஞ் சாரலும் ஆகா
எரியுரு வாகியூ ரையம்
  இடுபலி யுண்ணியென் றேத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயின தூவி
  விகிர்தன சேவடி சேர்வோம்.  9 
குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யிற்
  கொள்கையி னார்புறங் கூற
வெண்டலை யிற்பலி கொண்டல்
  விரும்பினை யென்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
  ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத்
  தோன்றிநின் றானடி சேர்வோம்.  10 
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
  கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
  நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
  வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
  துயர்கெடு தல்எளி தாமே.

சுவாமி : மாணிக்கவண்ணவீசுரர்; அம்பாள் : வண்டார்பூங்குழலம்மை.  11 
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...