Monday, August 31, 2020

56. காரார் கொன்றை கலந்த

 

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

56. காரார் கொன்றை கலந்த

திருச்சிற்றம்பலம்


காரார் கொன்றை கலந்த முடியினர் சீரார் சிந்தை செலச்செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை ஆரா ராதி முதல்வரே.  1
நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழும் ஈசரே.  2 
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளும் உறைவரே.  3 
பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே.  4 
மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.  5 
போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே.  6 
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே.  7 
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.  8 
ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.  9 
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே.  10 
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

சுவாமி : ஆதிமூலேசுவரர்; அம்பாள் : மேகலாம்பிகை.  11 

திருச்சிற்றம்பலம்

Friday, August 28, 2020

55. ஊறி யார்தரு நஞ்சினை

 

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

55. ஊறி யார்தரு நஞ்சினை

திருச்சிற்றம்பலம்


ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் மாறி லாமணி கண்டரே.  1
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே.  2 
பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே.  3 
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே.  4 
மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே.  5
உரையா தாரில்லை யொன்றும்நின் தன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே.  6 
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.  7 
அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தஎம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.  8 
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.  9 
தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே.  10 
மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னும் மாற்பேற் றடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.

சுவாமி : தயாநிதீஸ்வரர்; அம்பாள் : கருணாம்பிகை.  11 

 திருச்சிற்றம்பலம்

54. பூத்தேர்ந் தாயன கொண்டுநின்

 

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

54. பூத்தேர்ந் தாயன கொண்டுநின்

திருச்சிற்றம்பலம்


பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால் ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக் கூத்தீ ரும்ம குணங்களே.  1
இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே.  2 
உள்வேர் போல நொடிமை யினார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே.  3 
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே.  4 
குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயருள் நல்குமே.  5 
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயருள் நல்குமே.  6 
தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே.  7 
என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.  8 
நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.  9 
கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பால்எயில் எய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே.  10 
குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.    11

சுவாமி : வேதநாதர்; அம்பாள் : இளமுலைநாயகியம்மை.  


திருச்சிற்றம்பலம்

Thursday, August 27, 2020

53. தேவராயும் அசுரராயுஞ்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

53. தேவராயும் அசுரராயுஞ்


திருச்சிற்றம்பலம்


தேவராயும் அசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர் நாவராயும் நண்ணுபாரும் விண்எரிகால் நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசன்என்னும் மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.  1
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதிபார்
எற்றுநீர் தீக் காலு மேலை விண்இயமா னனோடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள் 
முற்றுமாகி வேறுமானான் மேயதுமு துகுன்றே.  2 
வாரிமாகம் வைகுதிங்கள் வாளரவஞ் சூடி  
நாரிபாகம்2 நயந்துபூமேல் நான்முகன்றன் தலையில் 
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்  
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயதுமு துகுன்றே.  3 
பாடுவாருக் கருளும்எந்தை பனிமுதுபௌ வமுந்நீர்
நீடுபாரும் முழுதுமோடி யண்டர்நிலை கெடலும்
நாடுதானும் ஊடுமோடி ஞாலமும்நான் முகனும்  
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்ததுமு துகுன்றே.  4 
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம்மீ சணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர்திசை வணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயதுமு துகுன்றே.  5 
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லரா நல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைத்தைம் புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க்  கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே.  6 
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்துபோயிற்று.  7 
மயங்கும்மாயம் வல்லராகி வானினொடு நீரும்
இயங்குவோருக் கிறைவனாய இராவணன்தோள் நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே.  8 
ஞாலமுண்ட மாலும்மற்றை நான்முகனும் மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப்போ தும்ஏத்தும்
மூலமுண்ட நீற்றர் வாயான் மேயதுமு துகுன்றே.  9 
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல்மிண்டர் சொல்லை  
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங்கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் பொங்குவிடத் தையுண்ட   
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயதுமு துகுன்றே.  10 
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்குமு துகுன்றைப் 
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
.... .... .... .... .... .... .... ....

     இப்பதிகத்தில் 11-ஆம் செய்யுளில் பின்னிரண்டடிகள்  மறைந்துபோயின.

சுவாமி : விருத்தகிரீஸ்வரர்; அம்பாள் : விருத்தாம்பிகை.  
  

திருச்சிற்றம்பலம்

52. மறையுடையாய் தோலுடையாய்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

52. மறையுடையாய் தோலுடையாய்

திருச்சிற்றம்பலம்


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  1
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  2 
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  3 
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  4 
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  5 
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  6 
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  7 
குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  8 
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்
சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  9 
வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.  10 
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

சுவாமி : நித்யசுந்தரேஸ்வரர்; அம்பாள் : மங்களநாயகி.  11 
  

திருச்சிற்றம்பலம்

Wednesday, August 26, 2020

51. வெங்கண் ஆனை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

51. வெங்கண் ஆனை

திருச்சிற்றம்பலம்


வெங்கண் ஆனை யீருரிவை போர்த்துவிளங் குமொழி மங்கைபாகம் வைத்துகந்த மாண்பதுவென் னைகொலாம் கங்கையோடு திங்கள்சூடிக் கடிகமழுங் கொன்றைத் தொங்கலானே தூயநீற்றாய் சோபுரமே யவனே.  1
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவிரிந் திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாம்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த  வெஞ்சிலையாய் சோபுரமே யவனே.     2 
தீயராய வல்லரக்கர் செந்தழலுள் ளழுந்தச்
சாயஎய்து வானவரைத் தாங்கிய தென்னைகொலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித்தோல் உடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே.  3 
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதரவென் னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங்கண் ணியொடும்
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுரமே யவனே.  4 
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணம்என் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் தன்னை யொல்க வுதைத்தருளித்
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.  5 
கொன்னவின்ற மூவிலைவேற் கூர்மழுவாட் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பென் னைகொலாம்
அன்னமன்ன மெல்நடையாள் பாகம்அமர்ந் தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுரமே யவனே.  6 
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடியார் பணிவார்
கற்றகேள்வி ஞானமான காரணம்என் னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன்வெண் டலையில்
துற்றலான கொள்கையானே சோபுரமே யவனே.  7 
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.  8 
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணம்என் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மேல் அயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.  9 
புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே யுரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமையென் னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுரமே யவனே.  10 
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தால்
ஞாலம்மிக்க தண்டமிழால் ஞானசம் பந்தன்சொன்ன
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர்வா னுலகே.

சுவாமி : மங்களபுரீஸ்வரர்; அம்பாள் : தியாகவல்லியம்மை.  11 
  

திருச்சிற்றம்பலம்

Tuesday, August 25, 2020

50. ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

50. ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக்

திருச்சிற்றம்பலம்


ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி நல்லவாறே யுன்றன்நாமம் நாவில்நவின் றேத்த வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.    1
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநல்தே வரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனே.  2 

பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக் கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக்கின் றதுள்ளம் வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.  3

மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே நைவன் நாயேன் உன்றன்நாமம் நாளும்நவிற் றுகின்றேன் வையம்முன்னே வந்துநல்காய் வலிவலமே யவனே.  4

துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவனுன் திறமே தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக்கீழ்ப் பணிய நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும்நினைந் தடியேன் வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.  5

புரிசடையாய் புண்ணியனே நண்ணலார்மூ வெயிலும் எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமையோர் பரவும் கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று வரியரவா வந்துநல்காய் வலிவலமே யவனே.  6

தாயுநீயே தந்தைநீயே சங்கரனே யடியேன் ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின் றதுள்ளம் ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின்றொன் றலொட்டார் மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.  7

நீரொடுங்குஞ் செஞ்சடை யாய்நின் னுடையபொன் மலையை வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தன்இரா வணனைத் தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலால் அடர்த்த வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே.  8

ஆதியாய நான்முகனும் மாலுமறி வரிய சோதியானே நீதியில்லேன் சொல்லுவன்நின் திறமே ஓதிநாளும் உன்னையேத்தும் என்னைவினை அவலம் வாதியாமே வந்துநல்காய் வலிவலமே யவனே.  9

பொதியிலானே பூவணத்தாய் பொன்திகழுங் கயிலைப் பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள் மதியிலாதா ரென்செய்வாரோ வலிவல மேயவனே.  10

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனைப் பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும் மன்னுசோதி யீசனோடே மன்னியிருப் பாரே.    11 சுவாமி:இருதய கமலநாதேஸ்வரர்; அம்பாள்: வாளையங்கண்ணி.

திருச்சிற்றம்பலம்

49. போகமார்த்த பூண்முலையாள்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

49. போகமார்த்த பூண்முலையாள்

திருச்சிற்றம்பலம்

        போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
     பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
    ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.  1 
      தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
       பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.  2 

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர் பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.  3

புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலே மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப் பல்கவல்ல தொண்டர்தம் பொற்பாத நிழற்சேர நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.  4
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
  நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
   நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.  5 
  திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
  எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
     தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.  6 
   வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொண் முழவதிர
     அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
       செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.  7 

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால் சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீறாடுவ தன்றியும்போய்ப் பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்ம தியஞ்சூடி நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.  8

உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி அண்ணலாகா வண்ணல்நீழல் ஆரழல் போலுருவம் எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர் நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.  9
மாசுமெய்யர் மண்டைத்தேரர் ண்டர் குணம்இலிகள்
       பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.  10 
   தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
 உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.    11
சுவாமி:தர்ப்பாரண்யேஸ்வரர்;
அம்பாள்:போகமார்த்தபூண்முலையாள். 
  

திருச்சிற்றம்பலம்

48. நூலடைந்த கொள்கையாலே

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

48. நூலடைந்த கொள்கையாலே

திருச்சிற்றம்பலம்


நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.  1
நீறடைந்த மேனியின்கண் நேரிழை யாளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.  2 
ஊனடைந்த வெண்டலையி னோடு பலிதிரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.  3 
வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே.  4 
பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.  5 
காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.  6 
பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.  7 
மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யும்
சேவடைந்த வூர்தியானே சேய்ஞலூர் மேயவனே.  8 
காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.  9 
மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த வூணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகம ழும்பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.  10 
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.

சுவாமி : சத்தியகிரீஸ்வரர்; அம்பாள் : சகிதேவியம்மை.  11 

  திருச்சிற்றம்பலம்

Sunday, August 23, 2020

47. பல்லடைந்த வெண்டலையிற்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

47. பல்லடைந்த வெண்டலையிற்

திருச்சிற்றம்பலம்


பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய் வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ் செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.  1
கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.  2 
நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.  3 
கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.  4 
புரம்எரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னைக்
கரம்எடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
மரம்உரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
சிரம்எடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.  5 
கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்தலென்னே
எண்ணுமூன்று கனலும்ஓம்பி யெழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.  6 
குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மை யென்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.  7 
மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச வொருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.  8 
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேதம் ஓதலார்கள் நம்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.  9 
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.  10 
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தன்உரை
பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.

சுவாமி : தோணியப்பர்; அம்பாள் : திருநிலைநாயகி.  11 
 

திருச்சிற்றம்பலம்

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...