Tuesday, October 13, 2020

88. முற்றுஞ் சடைமுடிமேன்


 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

88. முற்றுஞ் சடைமுடிமேன்


திருச்சிற்றம்பலம்


முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படஅரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  1 
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  2 
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  3 
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  4 
தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகரம் ஒருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  5 
ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  6 
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  7 
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் திறலழித்தான் அணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  8 
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.  9
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.  10 
அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.    11

சுவாமி : அன்னவிநோதன்; அம்பாள் : குரவங்கழ்குழலி. 

  திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...