Friday, October 9, 2020

82. இரும்பொன் மலைவில்லா எரியம்

 

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

82. இரும்பொன் மலைவில்லா எரியம்

திருச்சிற்றம்பலம்


இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில் திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில் தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.  1
வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலியோவா வீழி மிழலையே.  2 
பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர்1 வீழி மிழலையே.  3 
இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.  4
கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.  5 
மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.  6 
மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.  7 
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.  8 
கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.  9 
சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.  10 
மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை யெழிலார் பொழில்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவை சொல்ல வல்லோர் நல்லோரே.    11

சுவாமி : வீழிநாதஸ்வாமி; அம்பாள் : சுந்தரகுஜாம்பிகை.   

  
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...