Saturday, October 10, 2020

84. புனையும் விரிகொன்றைக்

 

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

84. புனையும் விரிகொன்றைக்


திருச்சிற்றம்பலம்

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.  1 
பெண்ணாண் எனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  2 
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  3 
மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற அண்ணல் லணியாய
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.  4 
ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.  5 
ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.  6 
அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  7 
வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்தோள்
இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.  8 
திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.  9 
நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  10 
கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாம்
கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.    11

சுவாமி : காயாரோகணேஸ்வரர்; அம்பாள் : நீலாயதாட்சி  


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...