Saturday, October 10, 2020

85. கல்லால் நிழல்மேய கறைசேர்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

85. கல்லால் நிழல்மேய கறைசேர்


திருச்சிற்றம்பலம்

கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே.  1 
தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே.  2 
அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே.  3 
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.  4 
மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே.  5 
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே.  6 
அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே.  7 
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே.  8 
நாகத் தணையானும் நளிர்மா மலரானும்
போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே.  9 
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே.  10 
நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.    11

சுவாமி : பூமீஸ்வரர்; அம்பாள் : தேகசௌந்தரி.  
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...