திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
திருச்சிற்றம்பலம்
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே. 1
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே. 2
தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே. 3
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக் களித்த காழியார்
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே. 4
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
காடே றிச்சங் கீனும் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம்
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே. 5
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம்
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே. 6
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடும்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே. 7
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே. 8
ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்
தோற்றங் காணா வென்றிக் காழியார்
ஏற்ற மேறங் கேறு மவர்போலாம்
கூற்ற மறுகக் குமைத்த குழகரே. 9
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே. 10
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா இருப்பரே.
சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. 11
No comments:
Post a Comment