Wednesday, July 29, 2020

22. சிலைதனை நடுவிடை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

22. சிலைதனை நடுவிடை

திருச்சிற்றம்பலம்


சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு கொலைமலி விடமெழ அவருடல் குலைதர வதுநுகர் பவனெழில் மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே.  1
கரமுத லியஅவ யவமவை கடுவிட அரவது கொடுவரு
வரல்முறை யணிதரும் அவனடல் வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை யிமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவனம் அமர்தரு பரமனே.  2 
இழைவளர் தருமுலை மலைமக ளினிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயிலுறு மரிமுசி வொடும்எழ முளரி யொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே.  3 
நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு தவமுயல் தருமுனி வர்கள்தம
மலமறு வகைமனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே.  4 
கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவனம் அமர்தரு பரமனே.  5 
கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே.  6 
இருநில னதுபுன லிடைமடி தரஎரி புகஎரி யதுமிகு
பெருவெளி யினில்அவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே.  7 
சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடும் இருபது
கனமரு வியபுயம் நெரிவகை கழலடி யிலொர்விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ் வுறஅருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர் மறைவனம் அமர்தரு பரமனே.  8 
அணிமலர் மகள்தலை மகன்அயன் அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர அவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர னவனுரை மலிகடல் திரளெழும்
மணிவள ரொளிவெயில் மிகுதரு மறைவனம் அமர்தரு பரமனே.  9 
இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு
செயல்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்படம் உடல்பொதி பவரறி வருபரன் அவனணி
வயலினில் வளைவளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.  10 
வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல அவருல கினிலெழில் பெறுவரே.

சுவாமி : வேதாரண்யேஸ்வரர்; அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்.  11 
  திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...