Tuesday, July 21, 2020

14. வானிற்பொலி வெய்தும்மழை

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்


14. வானிற்பொலி வெய்தும்மழை


திருச்சிற்றம்பலம்


வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக் கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம் ஆனிற்பொலி யைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத் தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.  1
மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.  2 
மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான் வளநகரே.  3 
பருமாமத கரியோடரி யிழியும் விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.  4 
மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.  5 
கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென வுள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.  6 
மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடும் இளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.  7 
முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே
பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.  8 
அறையும்மரி குரலோசையை யஞ்சியடும் ஆனை
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.  9 
மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.  10 
கூனற்பிறை சடைமேல்மிக வுடையான் கொடுங்குன்றைக்
கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.  11

சுவாமி : கொடுங்குன்றநாதர்; அம்பாள் : குயிலமுதநாயகி.  
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...