Friday, July 31, 2020

25. மருவார் குழலி மாதோர்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

25. மருவார் குழலி மாதோர்

திருச்சிற்றம்பலம்


மருவார் குழலி மாதோர் பாகமாய்த் திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத் தீசன் கழல்களை மருவா தவர்மேல் மன்னும் பாவமே.  1
வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே.  2 
வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா ஊனமே.  3 
மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடையெம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயர மில்லையே.  4 
மலையான் மகளோ டுடனாய் மதிளெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.  5 
அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே.  6 
பையார் அரவே ரல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே.  7 
வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.  8 
காரார் வண்ணன் கனகம் அனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெம் நிமலனை
ஓரா தவர்மே லொழியா ஊனமே.  9 
மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே.  10 
நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.

சுவாமி : சொர்ணபுரீஸ்வரர்; அம்பாள் : சுகுந்தகுந்தளாம்பிகை.  11 
  

திருச்சிற்றம்பலம்

24. பூவார் கொன்றை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்


24. பூவார் கொன்றை


திருச்சிற்றம்பலம்


பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே.  1
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்   
கந்த மாலை கொடுசேர் காழியார் 
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்   
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.  2
தேனை வென்ற மொழியா ளொருபாகங் 
கான மான்கைக் கொண்ட காழியார் 
வான மோங்கு கோயி லவர்போலாம்  
ஆன இன்பம் ஆடும் அடிகளே.  3 
மாணா வென்றிக் காலன் மடியவே  
காணா மாணிக் களித்த காழியார் 
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்   
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.  4 
மாடே ஓதம் எறிய வயற்செந்நெல் 
காடே றிச்சங் கீனும் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம் 
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.  5 
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்  
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம் 
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.  6 
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடும்  
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்  
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்  
பல்ல விடத்தும் பயிலும் பரமரே.  7 
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்   
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம் 
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.  8 
ஆற்ற லுடைய அரியும் பிரமனுந் 
தோற்றங் காணா வென்றிக் காழியார்  
ஏற்ற மேறங் கேறு மவர்போலாம்  
கூற்ற மறுகக் குமைத்த குழகரே.  9 
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர் 
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே.  10 
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன  
பாரார் புகழப் பரவ வல்லவர்   
ஏரார் வானத் தினிதா இருப்பரே.

சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி.  11 
  

திருச்சிற்றம்பலம்

Thursday, July 30, 2020

23. மடையில் வாளை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

23. மடையில் வாளை

திருச்சிற்றம்பலம்


மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.  1
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி 
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே.  2 
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்  
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே.  3 
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்  
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்   
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.  4 
மயிலார் சாயல் மாதோர் பாகமா  
எயிலார் சாய எரித்த எந்தைதன் 
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.  5 
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் 
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் 
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.  6 
நிழலார் சோலை நீல வண்டினங்   
குழலார் பண்செய் கோலக் காவுளான்  
கழலான் மொய்த்த பாதங் கைகளால்  
தொழலார் பக்கல் துயர மில்லையே.  7 
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை   
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் 
குறியார் பண்செய் கோலக் காவையே   
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.  8 
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில் 
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.  9 
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங் 
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்   
பற்றிப் பரவப் பறையும் பாவமே.  10 
நலங்கொள் காழி ஞான சம்பந்தன் 
குலங்கொள் கோலக் காவு ளானையே 
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்  
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

சுவாமி : சப்தபுரீஸ்வரர்; அம்பாள் : ஓசை கொடுத்த நாயகி.  11 
  

திருச்சிற்றம்பலம்

Wednesday, July 29, 2020

22. சிலைதனை நடுவிடை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

22. சிலைதனை நடுவிடை

திருச்சிற்றம்பலம்


சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு கொலைமலி விடமெழ அவருடல் குலைதர வதுநுகர் பவனெழில் மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே.  1
கரமுத லியஅவ யவமவை கடுவிட அரவது கொடுவரு
வரல்முறை யணிதரும் அவனடல் வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை யிமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவனம் அமர்தரு பரமனே.  2 
இழைவளர் தருமுலை மலைமக ளினிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயிலுறு மரிமுசி வொடும்எழ முளரி யொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே.  3 
நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு தவமுயல் தருமுனி வர்கள்தம
மலமறு வகைமனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே.  4 
கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவனம் அமர்தரு பரமனே.  5 
கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே.  6 
இருநில னதுபுன லிடைமடி தரஎரி புகஎரி யதுமிகு
பெருவெளி யினில்அவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே.  7 
சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடும் இருபது
கனமரு வியபுயம் நெரிவகை கழலடி யிலொர்விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ் வுறஅருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர் மறைவனம் அமர்தரு பரமனே.  8 
அணிமலர் மகள்தலை மகன்அயன் அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர அவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர னவனுரை மலிகடல் திரளெழும்
மணிவள ரொளிவெயில் மிகுதரு மறைவனம் அமர்தரு பரமனே.  9 
இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு
செயல்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்படம் உடல்பொதி பவரறி வருபரன் அவனணி
வயலினில் வளைவளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.  10 
வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல அவருல கினிலெழில் பெறுவரே.

சுவாமி : வேதாரண்யேஸ்வரர்; அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்.  11 
  திருச்சிற்றம்பலம்

Tuesday, July 28, 2020

21. புவம்வளி கனல்புனல்

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்


21. புவம்வளி கனல்புனல்


திருச்சிற்றம்பலம்


புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுணம் அமர்நெறி திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை யவைதம பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே.  1
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுஅறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு மகளொடு திகழ்வரே.  2 
பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே.  3 
நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதம்அணை தரஅருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே.  4 
சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரம்நினைப வர்கலை மகள்தர நிகழ்வரே.  5 
சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன் நிலனிடை நிகழுமே.  6 
கதமிகு கருவுரு வொடுவுகி ரிடவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக ழெயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே.  7 
அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே.  8 
அடல்மலி படையரி அயனொடும் அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம் நினைபவர் வழிபுவி திகழுமே.  9 
குணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை பவரெழி லுருவுடை யவர்களே.  10 
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநலம் மிகுவரே.

சுவாமி : சிவபுரீஸ்வரர்; அம்பாள் : ஆர்யாம்பாள்.  11 
 

திருச்சிற்றம்பலம்

Monday, July 27, 2020

20. தடநில வியமலை நிறுவியொர்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

20. தடநில வியமலை நிறுவியொர்

திருச்சிற்றம்பலம்


தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ டடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசின விடம்அடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.  1
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.  2 
மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே.  3 
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே.  4 
அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே.  5 
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே.  6 
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதி
திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.  7 
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே.  8 
அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட ஒழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.  9 
இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே.  10 
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.

சுவாமி : வீழியழகர்; அம்பாள் : அழகுமுலையம்மை.  11 
  

திருச்சிற்றம்பலம்

Sunday, July 26, 2020

19. பிறையணி படர்சடை முடியிடை

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

19. பிறையணி படர்சடை முடியிடை

திருச்சிற்றம்பலம்


பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை இறையணி வளையிணை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகை கறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கன லுருவினன் நறையணி மலர்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழன் மருவுமே.  1
பிணிபடு கடல்பிற விகளறல் எளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதம ரனலுரு வினன்அவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை யுமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநல மலிகழ லிணைதொழன் மருவுமே.  2 
வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில் விழவொலி மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி யிரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை யிருள்கெட நனிநினை வெய்துமதே.  3 
வினைகெட மனநினை வதுமுடி கெனில்நனி தொழுதெழு குலமதி
புனைகொடி யிடைபொருள் தருபடு களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலம்அமர் கதிர்மதி யினன்அதிர் கழல்களே.  
தலைமதி புனல்விட அரவிவை தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளினன் நிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி லெரியுண மனமரு வினனல
கலைமரு வியபுற வணிதரு கழுமலம் இனிதமர் தலைவனே.  5 
வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய கழுமலம் அமர்கன லுருவினன்
அரைபொரு புலியதள் உடையினன் அடியிணை தொழவருவினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட வுயருல கெய்தலொரு தலைமையே.  6 
முதிருறு கதிர்வளர் இளமதி சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை யுடைபுலி அதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி தொழுமறி வலதறி வறியமே.  7 
கடலென நிறநெடு முடியவ னடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படையரு ளியபுக ழரவரை யினன்அணி கிளர்பிறை
விடம்நிறை மிடறுடை யவன்விரி சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகள்தன் மறுகுடை யுயர்கழு மலவியன் நகரதே.  8 
கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர்கன லுருவினன் அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையு மிலநில வகைதனி லெளிதிமை யவர்விய னுலகமே.  9 
அமைவன துவரிழு கியதுகி லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம ரிறைவன தடிபர வுவர் தமை
நமையல வினைநல னடைதலி லுயர்நெறி நனிநணு குவர்களே.  10 
பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை கழுமலம் உறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே.

சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி.  11 
  

திருச்சிற்றம்பலம்

Saturday, July 25, 2020

18. சூலம்படை சுண்ணப்பொடி

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்


18. சூலம்படை சுண்ணப்பொடி


திருச்சிற்றம்பலம்

சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.  1 
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.  2 
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லாதென துள்ளம்முண ராதே.  3 
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.  4 
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது ஏந்தியன லாடுங்
கழலின்னோலி யாடும்புரி கடவுள்களை கண்ணே.  5 
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
ஊரன்கழ லல்லாதென துள்ளம் முணராதே.  6 
பற்றியொரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.  7
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெம்
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.  9 
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.  10 
குன்றம்மது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.

சுவாமி : மகாலட்சுமீசர்; அம்பாள் : லோகநாயகி.  11 
  

திருச்சிற்றம்பலம்

Friday, July 24, 2020

17. மனமார்தரு மடவாரொடு

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்


17. மனமார்தரு மடவாரொடு

திருச்சிற்றம்பலம்


மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச் சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.  1
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புக ழொளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.  2 
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.  3 
பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.  4 
பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.  5 
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் குணமார்தரு2 மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.  6 
நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்3
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.  7 
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.  8 
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.  9 
தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்சமண் நடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே.  10 
கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.

சுவாமி : சற்குணேஸ்வரர்; அம்பாள் : மங்களவல்லி.  11 
  

திருச்சிற்றம்பலம்

Thursday, July 23, 2020

16. பாலுந்துறு திரளாயின

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்


16. பாலுந்துறு திரளாயின


திருச்சிற்றம்பலம்

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.  1 
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை யதுவே.  2 
கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.  3 
தணியார்மதி யரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
அணியார்மணல் அணைகாவிரி ஆலந்துறை யதுவே.  4 
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை ஆந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.  5 
மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.  6 
முடியார்தரு சடைமேல்முளை யிளவெண்மதி சூடிப்
பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கைக்
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.  7 
இலங்கைமனன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை யடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.  8 
செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.  9 
நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.  10 
பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி ஆலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.

சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : அல்லியங்கோதை.  11 

திருச்சிற்றம்பலம்

Wednesday, July 22, 2020

15. மையாடிய கண்டன்மலை

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்


15. மையாடிய கண்டன்மலை

திருச்சிற்றம்பலம்


மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.  1 
பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.  2 
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.  3 
சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மன லேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன் னுறையிடமாம்1
கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.  4 
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனற்காவிரிப ரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதன்கரை நிகழ்வாய நெய்த்தான
நகரான்அடி யேத்தந்நமை நடலை யடையாவே.  5 
விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைசடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.  6 
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித் தொழுவாரே.  7 
அறையார்கடல் இலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற வூன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.  8 
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே.  9 
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.  10 
தலமல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.

சுவாமி : நெய்யாடியப்பர்; அம்பாள் : பாலாம்பிகை.  11 

திருச்சிற்றம்பலம்

Tuesday, July 21, 2020

14. வானிற்பொலி வெய்தும்மழை

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்


14. வானிற்பொலி வெய்தும்மழை


திருச்சிற்றம்பலம்


வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக் கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம் ஆனிற்பொலி யைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத் தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.  1
மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.  2 
மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான் வளநகரே.  3 
பருமாமத கரியோடரி யிழியும் விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.  4 
மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.  5 
கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென வுள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.  6 
மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடும் இளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.  7 
முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே
பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.  8 
அறையும்மரி குரலோசையை யஞ்சியடும் ஆனை
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.  9 
மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.  10 
கூனற்பிறை சடைமேல்மிக வுடையான் கொடுங்குன்றைக்
கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.  11

சுவாமி : கொடுங்குன்றநாதர்; அம்பாள் : குயிலமுதநாயகி.  
  

திருச்சிற்றம்பலம்

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...