Sunday, November 8, 2020

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்


திருச்சிற்றம்பலம்


அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், பரவி உய்ம்மினே.  1
காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணு வின்கழல், பேணி உய்ம்மினே.  2 
நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.  3 
அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும், எங்க ளீசனே.  4 
வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே.  5 
பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.  6 
கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.  7 
நறவம் ஆர்பொழிற், புறவ நற்பதி
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.  8 
தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்றுநினைமினே.  9 
அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை யெய்திநின், றியலும் உள்ளமே.  10 
தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.  11 
தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே.    12

சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள்  : திருநிலைநாயகி.  


திருச்சிற்றம்பலம்

89. படையார் தருபூதப் பகடார்

 

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

89. படையார் தருபூதப் பகடார்


திருச்சிற்றம்பலம்


படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.  1 
இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.  2 
விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.  3 
அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத்திரு வாமே.  4 
வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.  5 
நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.  6 
இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று.  7 
ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.  8 
மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார்மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.  9 
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன்தன் அடியே அடைவோமே.  10 
ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்   
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார் 
பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.    11

சுவாமி : நீலகண்டேஸ்வரர்; அம்பாள் : நீலமலர்கண்ணி. 

திருச்சிற்றம்பலம்

Tuesday, October 13, 2020

88. முற்றுஞ் சடைமுடிமேன்


 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

88. முற்றுஞ் சடைமுடிமேன்


திருச்சிற்றம்பலம்


முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படஅரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  1 
குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  2 
முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  3 
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  4 
தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகரம் ஒருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  5 
ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  6 
இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  7 
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் திறலழித்தான் அணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.  8 
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.  9
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.  10 
அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.    11

சுவாமி : அன்னவிநோதன்; அம்பாள் : குரவங்கழ்குழலி. 

  திருச்சிற்றம்பலம்

Monday, October 12, 2020

87. சுடுகூ ரெரிமாலை யணிவர்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

87. சுடுகூ ரெரிமாலை யணிவர்


திருச்சிற்றம்பலம்


சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.  1
பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடஅன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.  2 
சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்
ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.  3 
துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.  4 
துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார்
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே.  5 
தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
கிளரும் அரவார்த்துக்  கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.  6 
நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழி கொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.  7 
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.  8 
சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.  9 
திருமா லடிவீழத் திசைநான் முகனாய
பெருமான் உணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா
அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.  10 
படிநோன் பவையாவர் பழியில் புகழான
கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.    11

சுவாமி : வடுகீஸ்வரர்; அம்பாள் : திரிபுரசுந்தரி.  

திருச்சிற்றம்பலம்

Sunday, October 11, 2020

86. கொட்டும் பறைசீராற் குழும

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

86. கொட்டும் பறைசீராற் குழும


திருச்சிற்றம்பலம்

கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.  1 
ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட் கடையா குற்றமே.  2 
சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் அடியார்கட் கடையா பாவமே.  3
நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப் பித்தொழுது
தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே.  4 
ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.  5 
கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே.  6 
எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.  7 
காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்
நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாரா யிகழா தெழுந் தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே.   8 
வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.  9 
பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட் கில்லை இடர்தானே.  10 
தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைக லேத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.    11

சுவாமி:கல்யாணசுந்தரேஸ்வரர்;அம்பாள்:கல்யாணசுந்தரி.     

திருச்சிற்றம்பலம்

Saturday, October 10, 2020

85. கல்லால் நிழல்மேய கறைசேர்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

85. கல்லால் நிழல்மேய கறைசேர்


திருச்சிற்றம்பலம்

கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே.  1 
தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே.  2 
அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே.  3 
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.  4 
மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே.  5 
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே.  6 
அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே.  7 
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே.  8 
நாகத் தணையானும் நளிர்மா மலரானும்
போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே.  9 
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே.  10 
நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.    11

சுவாமி : பூமீஸ்வரர்; அம்பாள் : தேகசௌந்தரி.  
  

திருச்சிற்றம்பலம்

84. புனையும் விரிகொன்றைக்

 

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

84. புனையும் விரிகொன்றைக்


திருச்சிற்றம்பலம்

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.  1 
பெண்ணாண் எனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  2 
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  3 
மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற அண்ணல் லணியாய
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.  4 
ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.  5 
ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.  6 
அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  7 
வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்தோள்
இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.  8 
திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.  9 
நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.  10 
கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாம்
கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.    11

சுவாமி : காயாரோகணேஸ்வரர்; அம்பாள் : நீலாயதாட்சி  


திருச்சிற்றம்பலம்

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...