Friday, September 25, 2020

74. நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

74. நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை

திருச்சிற்றம்பலம்


நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை நயந்து நயனத்தால் சுறவஞ் செறிவண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான் புறவம் உறைவண் பதியா மதியார் புரமூன் றெரிசெய்த இறைவன் அறவன் இமையோ ரேத்த உமையோ டிருந்தானே.  1
உரவன் புலியின் உரிதோ 
  லாடை யுடைமேற் படநாகம்  
விரவி விரிபூங் கச்சா 
  வசைத்த விகிர்தன் னுகிர்தன்னாற் 
பொருவெங் களிறு பிளிற 
  வுரித்துப் புறவம் பதியாக   
இரவும் பகலும் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  2 
பந்த முடைய பூதம் 
  பாடப் பாதஞ் சிலம்பார்க்கக் 
கந்த மல்கு குழலிகாணக் 
  கரிகாட் டெரியாடி  
அந்தண் கடல்சூழ்ந் தழகார் 
  புறவம் பதியா வமர்வெய்தி
எந்தம் பெருமான் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  3 
நினைவார் நினைய இனியான் 
  பனியார் மலர்தூய் நித்தலுங்   
கனையார் விடையொன் றுடையான் 
  கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனைவார் சடையின் முடியான் 
  கடல்சூழ் புறவம் பதியாக
எனையா ளுடையான் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  4 
செங்கண் அரவும் நகுவெண் 
  டலையும் முகிழ்வெண் திங்களுந் 
தங்கு சடையன் விடைய 
  னுடையன் சரிகோ வணஆடை  
பொங்கு திரைவண் கடல்சூழ்ந் 
  தழகார் புறவம் பதியாக  
எங்கும் பரவி இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  5 
பின்னு சடைகள் தாழக் 
  கேழல் எயிறு பிறழப்போய்  
அன்ன நடையார் மனைகள் 
  தோறும் அழகாற் பலிதேர்ந்து   
புன்னை மடலின் பொழில்சூழ்ந் 
  தழகார் புறவம் பதியாக 
என்னை யுடையான் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  6 
உண்ணற் கரிய நஞ்சை 
  யுண்டொ ருதோ ழந்தேவர்  
விண்ணிற் பொலிய அமுத 
  மளித்த விடைசேர் கொடியண்ணல்  
பண்ணிற் சிறைவண் டறைபூஞ் 
  சோலைப் புறவம் பதியாக
எண்ணிற் சிறந்த இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  7 
விண்தான் அதிர வியனார் 
  கயிலை வேரோ டெடுத்தான்றன்  
திண்தோ ளுடலும் முடியு 
  நெரியச் சிறிதே யூன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் 
  பெருமான் புறவம் பதியாக
எண்தோ ளுடையான் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  8 
நெடியான் நீள்தா மரைமே 
  லயனும் நேடிக் காண்கில்லாப்
படியா மேனி யுடையான் 
  பவள வரைபோல் திருமார்பிற்
பொடியார் கோலம் உடையான் 
  கடல்சூழ் புறவம் பதியாக   
இடியார் முழவார் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  9 
ஆலும் மயிலின் பீலி 
  யமணர் அறிவில் சிறுதேரர்  
கோலும் மொழிகள் ஒழியக் 
  குழுவுந் தழலும் எழில்வானும்   
போலும் வடிவும் உடையான் 
  கடல்சூழ் புறவம் பதியாக   
ஏலும் வகையால் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  10 
பொன்னார் மாட நீடுஞ் 
  செல்வப் புறவம் பதியாக   
மின்னா ரிடையாள் உமையா 
  ளோடும் இருந்த விமலனைத்
தன்னார் வஞ்செய் தமிழின் 
  விரகன் உரைத்த தமிழ்மாலை
பன்னாள் பாடி யாடப் 
  பிரியார் பரலோ கந்தானே.    11

சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் : பெரியநாயகி.  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...