திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
61. நறைகொண்ட மலர்தூவி
திருச்சிற்றம்பலம்
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும் முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. 1
வாரேற்ற பறையொலியுஞ்
சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ
டோங்கியசீர் விழவோவாச்
சீரேற்றம் உடைத்தாய
செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான்
கணபதீச் சரத்தானே. 2
வரந்தையான் சோபுரத்தான்
மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான்
கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான்
கணபதீச் சரத்தானே. 3
தொங்கலுங் கமழ்சாந்தும்
அகில்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த
அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த
செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்
கணபதீச் சரத்தானே. 4
பாலினால் நறுநெய்யாற்
பழத்தினாற் பயின்றாட்டி
நூலினால் மணமாலை
கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ்
செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான்
கணபதீச் சரத்தானே. 5
நுண்ணியான் மிகப்பெரியான்
ஓவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நம்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே. 6
மையினார் மலர்நெடுங்கண்
மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவம்
அரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினார் தண்கழனிச்
செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூரெரியான்
கணபதீச் சரத்தானே. 7
தோடுடையான் குழையுடையான்
அரக்கன்தன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான்
பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங்
குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையான் நாடுடையான்
கணபதீச் சரத்தானே. 8
ஆனூரா வுழிதருவான்
அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான்
வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டாங்
குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான்
கணபதீச் சரத்தானே. 9
செடிநுகருஞ் சமணர்களுஞ்
சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க்
கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்
கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
கணபதீச் சரத்தானே. 10
கறையிலங்கு மலர்க்குவளை
கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயற்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச்
செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார்
வானுலகத் திருப்பாரே. 11
சுவாமி : உத்தராபதீஸ்வரர்; அம்பாள் : குழலம்மை.
No comments:
Post a Comment